About Us

யார் நாங்கள் ?

பெருமலையின் உச்சியில் தனியாக நின்று கொண்டிருக்கும் அந்த மரத்தின் இடது பக்க கிளையிலிருந்து அந்த இலை காற்றில் மெதுவாக ஆடியபடியே கீழே விழுகிறது. பிறந்து வளர்ந்த தன் மரத்திற்கு விடை கொடுத்தபடியே மரணத்தைத் தழுவுகிறது. மழையின் வேகம் அந்தப் புழுவின் நகர்வை நரகமாக்குகிறது. அடர் வனத்தின் ஆபத்துகளை தன் அசாத்திய தைரியம் கொண்டு கடக்கிறது அந்தப் புழு. பல ஆண்டுகளாக நீரைக் கண்டிராத அந்த நிலம் விரிசல் கண்டிருக்கிறது. விழுங்க எச்சிலும் கூட சுரக்க முடியாமல் உயிர் பிழைத்துக் கிடக்கிறான் அந்த விவசாயி. பிளந்த நிலத்தின் விரிசல் கோட்டில் தளர்ந்த நடையில் சென்று கொண்டிருந்தது எலும்பில் தோல் போர்த்திய அந்த எலி. தூரதேசம் எங்கிருந்தோ கடலில் மிதந்து வந்துக் கொண்டிருக்கிறது அந்த மரக்கட்டை. அதைச் சுற்றி விளையாடிக் கொண்டிருக்கிறது ஓராயிரம் மீன் கூட்டம். மனைவி ஆக்கிக் கொடுத்த நண்டுக் குழம்பு நிறைந்திருக்கும் தூக்குச் சட்டியோடு, படகில் அலையாடிக் கொண்டு, அதோ வருகிறான் அந்த மீனவன். கால் பட்டால் பொசுக்கிவிடும் அனலைக் கக்கிக் கொண்டிருக்கிறது பாலை மணல். அனல் காற்றுக்கு இடையே வானில் வட்டமிட்டுக் கொண்டிருக்கிறது அந்தப் பருந்து.

இப்படியாக குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என ஐந்திணைகளின் அத்தனை ஜீவராசிகளையும் பேரன்போடு நேசிக்கிறோம். அவர்கள் வாழ்விலிருந்து கதைகளை எடுக்கிறோம். அவர்கள் வலியிலிருந்து வடிவங்களை வடிக்கிறோம். அவர்கள் வாழ்வின் கொண்டாட்டங்களை, கொடூரங்களை, மகிழ்ச்சியை, நெகிழ்ச்சியை, அன்பை, ஆசையை, வலியை, வேதனையை உடல் மொழியிலும், வசன வழியிலும் மேடை நாடகங்களாக அரங்கேற்றி வருகிறோம். சாதி, மதம், மொழி, இனம், நாடு என அத்தனை எல்லைகளையும் உடைத்தெறிந்து பேரன்பைப் பொழியும் பேராசையோடு பயணித்துக் கொண்டிருக்கிறோம். இதை சாத்தியாக்கும் ஆகச்சிறந்த வழியான கலை வழி பயணிக்கிறோம். நவீன மேடை நாடகங்கள், விழிப்புணர்வு நாடகங்கள், ஆட்டக்கலைகள் மற்றும் பாரம்பர்ய இசைக் கருவிகள் கொண்டு நிகழ்த்தப்படும் இசை நிகழ்ச்சிகள் நடத்துவதை மிக முக்கியப் பணியாக செய்து வருகிறோம். அது அல்லாது, பொம்மலாட்டம், தோல்பாவைக் கூத்து, தெருக் கூத்து போன்றவற்றையும் ஒருங்கிணைத்து நிகழ்த்தி வருகிறோம்.

நடிப்பு மற்றும் இசைக் கருவிகள் வாசிப்பு ஆகியவைக்கு இலவச வகுப்புகள் எடுத்து வருகிறோம். குறிப்பாக, தமிழகத்தின் பல்வேறு கிராம மற்றும் மலைவாழ் குழந்தைகளுக்கு "கலை வழி திறன் வளர்க்கும்" பயிற்சிகளைத் தொடர்ந்து கொடுத்து வருகிறோம். மலை உச்சி மரத்தின் இலையாகவும், அடர் வனத்தின் புழுவாகவும், விரிசல் நிலத்தின் விவசாயியாகவும், கடலாடும் மீனாகவும், வான் சுற்றும் பருந்தாகவும் உங்கள் முன் நிற்கும் நாங்கள் " திணைநிலவாசிகள்".